X

Getting Pregnant

Pregnancy

New Born

Toddler

Kids

By City

Collaborate With Us

ப்ளீஸ் மா…

Published on: 22 November , 2017 | Mythili Ramjee

லாவண்யா அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள் .... " அம்மா.... சீக்கிரம் ஒரே ஒரு கட்டுரை தானே ... எழுதிக்கொடு.... மிஸ் திட்டுவா. நாளைக்கு கொடுத்தே ஆகணும்.... எல்லாரும் கொடுத்திட்டா... ப்ளீஸ் மா... " 7 வயதுப் பெண் அழுவது போல் கெஞ்சியது என்னமோ போல்தான் இருந்தது... இருந்தாலும் நாளைக்கு வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை.... வேலைகள் எக்கச்சக்கம்... அதைப் பார்ப்பதா இவளுக்கு கட்டுரை எழுதுவதா? ஏதோ போட்டியாம்... இன்றைய கல்வி சூழலில் பெற்றோரின் பங்கு... உம... 4.30 மணி ஆறது.... எழுத ஆரம்பித்தால் கட்டாயம் 1 மணி நேரம் ஆகும்.... முடித்துவிட்டுதான் மார்க்கெட் போகணும்.... வாங்க வேண்டிய சாமான்கள் நிறைய இருக்கு... இவளை சமாளிக்க முடியாது... ' சரி ... அழாதே.... போய் கொஞ்சம் விளையாடு . நான் எழுதிட்டு உன்னைக் கூப்பிடறேன்... 'ஒருவழியாக அவளை வெளியே அனுப்பி விட்டேன்.... என்ன எழுதறது... மூட் வேண்டாமா? இதோ எழுத ஆரம்பித்தேன்..நடுநடுவில் , கிட்சன் வேலை, வாசலில் காலிங் மணி அழுத்தும் சப்தம், மளிகை சாமான், பூக்காரி .... என்று பல இன்னல்கள்....வேறு...   இன்றைய கல்வி சூழலில் பெற்றோரின் பங்கு.... இன்றைய கல்வி முறை ஆரோக்கியமானதா என்பதே முதலில் ஒரு கேள்விக் குறியாய் உள்ளது... ஆனால், அதைப் பற்றி பேசுவது இங்கு உசித்தமாக இருக்காது என கருதுகின்றேன்... இருக்கும் சூழலுக்கு ஏற்பத்தான் நாம் வாழும் நிலையில் உள்ளோம்.. நம் குழந்தைகளை 2 வயது முதலே பள்ளியில் கொண்டு விடுகின்றோம்.... அங்கு அவர்கள் செலவழிக்கும் நேரம் அதிகம். பெரும்பாலான பெற்றோர்கள் இன்று வேலைக்குச் செல்பவராகவே இருக்கின்றனர்... இருவரும் சம்பாதித்தால்தான் குடும்பம் நல்லவிதமாய் நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்... சிறு குழந்தைகளாயின், தினசரி அவர்களின் நடவடிக்கைகளை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது... அவர்கள் விளையாடும் முறை, பேசும் திறன், படிப்பின் மேல் உள்ள ஆர்வம் பலவற்றை தெரிந்து கொள்ளவேண்டும்.. எப்பொழுதும் குழந்தைகளை "படி, படி" என்றுக் கட்டாயப் படுத்தாமல் கொஞ்சம் கை , கால்களை அசைத்து விளையாடும் விளையாட்டுகளிலும் ஈடுபட செய்யவேண்டியது பெற்றோரின் கடமையாகும்...ஓடி, ஆடி, விளையாடுவதால் குழந்தையின் உடல் பலமும், மன பலமும் அதிகமாகும்... மூளையின் திறன் அதிகரிக்கும் என்பது ஆராய்ந்த ஒன்று.. அவர்கள் தவறுகள் செய்தாலோ, மதிப்பெண்கள் குறைவாய் பெற்றாலோ ஒரு பெரிய குற்றமாக சுட்டிக்காட்டாமல், இதமாய், அவர்களால் இன்னும் இன்னும் நன்றாக செய்யமுடியும் என்று ஊக்குவிக்கவேண்டும்... இப்படிச் செய்வதால் அவர்களுக்கே தான் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற எண்ணமும், மதிப்பெண்கள் அதிகம் பெறவேண்டும் என்கிற உத்வேகமும் அதிகமாகும்... உங்கள் குழந்தைகளை தயவு செய்து மற்றக் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள்... அதனால் நஷ்டமே தவிர எந்தவித பலனையும் நமக்குத் தரப்போவதில்லை என்பது உறுதி.. அவர்கள் படிக்கும் நேரங்களில் நாம் கொஞ்சம் அவர்களோடு கூட அமர்வது மிக நல்ல ஊக்கத்தைத் தரும்... நாம் அவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை சரிசெய்ய வேண்டாம்... நாம் இருக்கிறோம் என்கிற எண்ணமே அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைத் தரும்... நல்ல பழக்க வழக்கங்கள் பள்ளியில்தான் பயிலவேண்டும் என்பதில்லை... சிறு சிறு விஷயங்களை நாம் அன்றாடம் செய்யும் வேலைகள் மூலம் சொல்லித் தரலாம்... வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள் மற்றவரைப் பற்றி வீண் பேச்சு பேசாதீர்கள் , அதுவும் குழந்தைகள் முன். வீட்டைக் கொஞ்சம் கவனமாக சுத்தமாய் வைத்துக் கொள்ளுங்கள் விருந்தோம்பல் பற்றி சில வார்த்தைகளைப் பேசுங்கள் பெற்றோர் இருவரும் குழந்தைகள் முன் சண்டைப் போடாதீர்கள்.. இளமைக் காலம் என்பது மிகவும் ..முக்கியமானது. அதுவும் 16 வயது முதல், 19 வயதிலானப் பருவம் பெற்றோருக்கு மிகவும் சவாலான நேரம்.... இதை மேற்கொள்ளுவது என்பது ஒரு பெரும் கடலைத் தாண்டுவதுப் போல்தான்... பெண்களும் சரி ஆண்களும் சரி இதற்கு விதிவிலக்கல்ல.. இதுவரை பெற்றோர் பேச்சைக் கேட்டவர்கள் இப்பொழுது முறைப்பர் பிடிவாதம் அதிகமாகும் இரண்டு சக்கர வாகனம் மீது மோகம் தனிமையை விரும்புவது யாருடனும் பேசக்கூடாது என்கிற எண்ணம் புத்தகத்தைக் கண்டால் ஒரு வெறுப்பு ஏன் படிக்கவேண்டும் என்கிற கேள்வி இவற்றையெல்லாம் மீறி அவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலை...பரீட்சைகளில் வெற்றிகாணவேண்டிய நிர்பந்தம்... இவற்றில் எந்த மாறுபட்டக் கருத்திற்கு இடம் இல்லை...   பெற்றோர் மேற்கொள்ளவேண்டிய உக்திகள் கோபப்படாமல் இருப்பது அவர்கள பேசும் பொழுது கவனமாக கேட்டுக்கொள்வது நிதானமாய் , எரிச்சல் மூட்டாமல் அவர்களது எதிர்காலம் கல்வியில் உள்ளதை எடுத்துக் கூறுவது வாழ்க்கையில் முன்னேற வேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்துவது வீணாய் நேரத்தை செலவழிப்பதில் ஏற்படும் கொடுமைகளை சுருக்கமாய் சொல்வது இவற்றையெல்லாம் அவர்கள் கேட்பார்களா என்பது கேள்வி என்றாலும் ஒருமுறை இல்லாவிட்டால் ஒரு முறை கட்டாயம் செவி சாய்ப்பார்கள்..   வேறு வழி இல்லை...அறிந்தும் , அறியாத வயது, புரிந்தும் புரியாதப பருவம்... நண்பர்கள்தான் வாழ்க்கை என்கிற எண்ணம்... இருக்கட்டும். ஆனால், அது நல்வழியில் சொல்வதாயின் சரி... இல்லையேல் அதை தடுப்பதும் பெற்றோரின் கடமை அன்றோ... இன்றைய கல்வி சூழல் என்பது பெரும்பாலும் புத்தகப் புழுவாய் இருக்கச் செய்வதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வம் குறைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்...இத்தகைய சூழலை மாற்றவேண்டியதும் பெற்றோர்கள் அல்லவா? கல்வி கற்பிக்கும் வழி, திறன் எல்லாவற்றையும் நம்மால் மாற்ற இயலாது... ஆனால் , படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்யலாம்... அவர்களுக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளதோ அதை விளையாட விடலாம் . ஆடல், பாடல் இவற்றில் எதிலாவது கவனம் செலுத்த வைக்கலாம்... இதன் மூலம் அவர்களது எண்ணம், செயல் எல்லாம் விசாலமடையும் என்பதில் ஐயம் இல்லை... நம் குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில்.... நம் தேசத்தின் எதிர்காலம் அவர்கள் கையில்..!! பூர்ணிமா   அப்பாடா... முடித்துவிட்டேன்..... அதற்குள் லாவண்யா வந்தாள் ... அவளுக்கு ஹார்லிக்ஸ் கொடுத்தேன்... அவளை பக்கத்துக்கு வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச்சென்று வாங்கவேண்டியவற்றை வாங்கி வந்தேன்...   லாவண்யா சமர்த்தாக இருந்தாள் ... நான் எழுதியது சத்தியமாக அவளுக்குப் புரியவில்லை. ஆனால், தன் அம்மா தனக்காக எழுதினாள் என்கிற சந்தோஷம்.. எடுத்து தன் பேகில் பத்திரமாக வைத்துக் கொண்டாள ... மறுநாள், சுமங்கலிப் பிரார்த்தனை அமர்க்களமாய் முடிந்தது... எல்லோரும் கிளம்பிச் சென்றனர்... இரண்டு நாட்களில் லாவண்யா பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது.... சென்றேன்... என் கட்டுரைக்கு முதல் பரிசு தந்தனர்.... இவளுக்கு அளவற்ற சந்தோஷம்.... எனக்கும்தான்... என் மனதில் இருந்ததை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில்... மைதிலி ராம்ஜி
Share this post
Mythili Ramjee

பிஞ்சு குழந்தை உருவாகி, பெற்றெடுக்கும் பெண் தாயானவள்... அவளுக்கு இணை அவளே இப்பூவுலகில்... அந்தத் தாயின் உன்னதத்தை வெளிப்படுத்தும் கதைகள், கட்டுரைகள் இங்கு படைக்கின்றேன். சுகமான தருணங்கள், கற்பனை சந்தோஷங்கள், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை இதமான கதைகள் மூலம் உங்களை நிச்சயம் சந்திக்கின்றேன்...அனைவரின் அன்பான ஆதரவும், துணையும் நாடும் I am a writer/ Blogger . I have written and published 7 books in tamil. I write in English also. My writings are mostly in the form of short stories. Here, at Confused Parent .com platform I am the very first blogger in REGIONAL LANGUAGE - TAMIL. I sincerely thank Ekta Chawla for had given me this great opportunity. My focus will be mainly on motherhood, child care, child development & Issues. Seek all your support and guidance .


Thank you for the comment!