ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கல்யாணத்தில் இணைந்து , இல்லறத்து சுகத்தை அனுபவித்து அந்த உச்ச நிலையில் உருவாவதுதான் குழந்தை. அப்படி உருவாகும் பொழுதுதான் ஒரு பந்தம் ஏற்படுகின்றது. பாசம், நேசம், பந்தம், சொந்தம் எல்லாமே இதன் வழியில்தான் வாழையடி வாழையாக வருகின்றன..
இதுதான் நம் இந்திய கலாச்சாரம். இதை முறியடிப்பதோ, வரம்பை மீறி செயல் படுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. என்னைப் பொறுத்த வரையில் பெண் அல்லது ஆண் தனது வாழ்க்கையை ஒரு வரம்போடு வாழ்வதே உசிதம்.
வயது வந்த பெண் அல்லது ஆண் தனக்கு ஏற்ற இல்லற துணையை தானாகவோ அல்லது தனது பெற்றோர், பெரியவர்கள் மூலமோ ஒருவரை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.
அப்படித் தேர்ந்தெடுத்த துணையுடன் இல்லற சுகத்தை அனுபவிப்பதுதான் சாஸ்திரம். இதில் காணும் இன்பமும் , சுகமும் வேறெதிலும் இல்லை. தங்கள் வாரிசு உருவாகும் தருணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு வரப்பிரசாதம். அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் சொந்தங்களோ எண்ணில் அடங்காதவை...
இதை எல்லாம் ஒதுக்கி விட்டு ஒரு பெண்ணோ, அல்லது ஆணோ கல்யாணத்தை புறக்கணித்து தாம்பத்திய உறவில் ஈடுபட்டு உருவாகும் குழந்தையை எப்படி வரவேற்பது என்பது எனக்கு விளங்கவில்லை..
அந்தக் குழந்தைக்கு எந்த அடிப்படையில் அடையாளம் கொடுப்பது என்றும் புரியவில்லை. அப்படிப் பிறந்தக் குழந்தையை ஒரு பெண்ணால் வளர்க்க முடியுமா என்பது கட்டாயம் ஒரு கேள்விக் குறியே..!
குப்பைத் தொட்டிகளிலும், ரயில் தண்டவாளம், மேம்பாலங்களில் கிடைக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இப்படிப் பிறந்தவையே.... இது தேவையா? ஒரு குழந்தை வரம் வேண்டி எத்தனை தம்பதியினர் கோயில் , கோயிலாக வலம் வருகின்றனர்... எத்தனை மருத்துவ சிகிச்சை மேற்கொள்கின்றனர். இப்படி இருக்க, முறையற்று பிறந்த குழந்தைகளை யாரோ எடுத்து அனாதை இல்லங்களில் ஒப்படைக்கின்றனர். அதில் ஒன்று அல்ல இரண்டு தத்து எடுக்கப் படுகின்றன... அதனுடைய பிறப்பு வரலாற்றை அக் குழந்தை கேட்கும் தருவாயில் அதன் உணர்ச்சியை எண்ணிப் பாருங்கள்... !
"இதில் என்ன தவறு ? " என்று சில விஷமிகள் கேட்கலாம். அதற்கு பதில். ஆமாம் தவறுதான் என்பது எனது ஆழமானக் கருத்து.
என்ன அவசியம் ஒரு குழந்தைக்கு கல்யாணத்திற்கு முன்? காதலிக்கிறீர்களா ? பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அதுவரை கட்டாயம் வரம்போடு வாழுங்கள். உங்களால் அப்படி வாழ முடியவில்லை என்றால் இவ்வுலகை விட்டுச் செல்லுங்கள். எதற்காக ஒரு குழந்தையை உருவாக்கி அதன் வாழ்க்கையை ஒரு கேள்விக் குறியாக்க வேண்டும் ? நீங்கள் கெட்டது போக அது அனாதையாக ஒரு குப்பைத் தொட்டியில்!!
காதலிப்பது தவறு என்று சொல்ல வில்லை. ஆனால், காதலிப்பதோடு அது கல்யாணத்தில் முடிய வேண்டும் என்பதே எனது வாதம். நான் காதலிப்பேன் ஆனால் கல்யாணம் என்பது எல்லாம் தேவை இல்லை என்பது திமிர்த்தனம் அல்லது அயோகியத்தனம். அதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது யாருக்கும் பாதகம் இல்லை... ஆனால், ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டு உங்கள் வாழ்க்கையையும் வீணடித்து , குடும்பத்தாரையும் வேதனைப் படுத்தி, ஒரு பிஞ்சு வாழ்க்கையையும் கெடுப்பது தான் தவறு மட்டும் அல்ல.... குற்றம்.!
நீங்கள் தவறு செய்துவிட்டு இந்தச் சமுதாயத்தின் மேல் பழியைப் போடாதீர்கள். நீங்கள் செய்வதை எல்லாம் நாங்கள் ஒற்றுக் கொள்ளவேண்டும் என நினைப்பதே குற்றம் என நான் கருதுகின்றேன்.
நீங்கள் தவறு செய்துவிட்டு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உங்களுக்கு துணையாகவும், பலமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பது அதைவிடக் கொடூரம்.
கல்யாணத்திற்கு முன் தன் பெண் ஒரு குழந்தையை சுமக்கின்றாள் என்பதை அறியும் பெற்றோரின் வேதனை புரியுமா உங்களுக்கு? அதைவிட அவர்களை கொன்று விடலாம்.
உடல் ரீதியான சுகம் என்பது முறையான வழியில் அனுபவிப்பதில் இருக்கும் சந்தோஷம் இதில் இருக்குமா? சத்தியமாக இருக்காது. மனமும், உடலும் சேர்ந்து உணரும் சுகம் வேறு.
அது இயற்க்கை நமக்குத் தந்த வரம். அனுபவிக்க வேண்டாம் என்று யாரையும் தடுக்கவில்லை ஆனால், அதற்கு ஒரு முறை உள்ள பொழுது அதைக் கடைப்பிடிப்பது அவசியமே.
ஒரு சமுதாயம் என்று இருந்தால் அதன் கட்டுப் பாட்டுக்குள் இருப்பது நல்லது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. அது முரண்பாடான கருத்து மட்டுமே.
நீங்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுவதே தவறு. நீங்கள் எப்படி இருந்தாலும் அதைப் பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக நீங்கள் வளர்க்கப் போவது இல்லை. இது சத்தியம். எங்கோ தூக்கி எறியப் போகிறீர்கள். உங்களுக்கே தெரிகிறது அது வீண் என்று. அப்புறம் ? எதற்காக அதனை உருவாக்கினீர்கள். அழித்து விடலாம் என்கிற எண்ணத்தில் தானே? இதிலிருந்தே தெரிகிறது உங்களுக்குத் தேவை உடல் ரீதியான சுகம் மட்டுமே.
ஏதோ ஒன்று சேர்ந்தோம், சுகத்தை அனுபவித்தோம் அவ்வளவே உங்கள் எண்ணம். அதனை சற்று தள்ளி வைத்து விட்டு உணர்வு பூர்வமாக சிந்தியுங்கள்... தெளிவான விடை கிடைக்கும். அதுவே இல்லற வாழ்க்கை எனும் வரப்பிரசாதம்.
ஏன் என்றால்? கல்யாணம் ஆன ஒரு தம்பதியினருக்கு உருவாகும் குழந்தையை அவர்கள் எப்படி வரவேற்பார் என்று தெரியுமா உங்களுக்கு? உம்ம .. எப்படித் தெரியும்.? தங்கள் உயிரின் உயிராய் நினைப்பர். அதுவே உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
தேவையா? சொல்லுங்கள்.
கல்யாணம் செய்து கொள்ளாமல் இருவர் ஒன்றாய் வாழ்ந்து வருவது ஒரு இழிவே..! இதனை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவது தவறு. இதன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பதும் அபத்தமே !
குழந்தைப் பெற்றுக்கொள்ளுவது எனது உரிமை அதற்கு யார் தடை போடுவது ? . நான் கல்யாணம் செய்து கொள்ளாமல் பெற்றெடுப்பது எனது உரிமை என்று வாதித்தால், அப்படிப் பட்ட ஆணையோ பெண்ணையோ விபச்சார சட்டத்தின் கீழ் கைதி செய்வதுதான் முறை. அப்படி செய்தால்தான் இந்தச் சமுதாயம் ஒரு கலாச்சார ஒழுக்கமானதாய் இருக்கும் என்பது எனது தனிப் பட்ட தாழ்மையான கருத்து. .
கல்யாண பந்தத்தில் இணையாமல் இருவர் சேர்ந்து பெற்றெடுக்கும் குழந்தைக்கு ஏது அங்கீகாரம் ? பாதுகாப்பு? இருவரும் எப்பொழுது வேண்டுமானாலும் பிரியலாம். இருவருக்கும் தொடர்பு இல்லாமலே போகலாம். இதுதான் உண்மை. இப்படி ஒழுக்கம் தவறி பிறக்கும் குழந்தை வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே! இவர்கள் சுகத்திற்காக ஒரு சிசுவை உருவாக்கி அதன் எதிர்காலத்தை சூனியமாக்குவது முறையா?
இல்லற சுகத்தை அனுபவிக்கத்தான் கல்யாண பந்தம் ஏற்படுத்தினர் . அதனைப் புறக்கணித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
இது ஒருபுறம் இருக்க..
விதிவசத்தால் ஒரு வஞ்சகனால் உருவாகும் குழந்தை ( கொடூர கற்பழிப்பு ) என்பதை யாராலும் தடுக்க இயலாது அந்தச் சூழ்நிலையில் உருவாகும் குழந்தைக்கு அந்தப் பெண் எந்த விதத்திலும் பொறுப்பானவள் அல்ல. இருப்பினும் ஒரு கால கட்டத்தில் அதை சுமந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பொழுது அந்தப் பெண்ணை பரிவோடும், அனுதாபத்தோடும் பேணிக்காப்பாற்றுவது பெற்றோர் மற்றும் இந்தச் சமுதாயத்தின் பொறுப்பு.
தவறு செய்த அந்த ஆடவனின் கை அல்லது காலை வெட்டி எடுக்கவும் தயங்கக் கூடாது. அப்பொழுதுதான் மற்றொருவனுக்கு இது ஒரு பாடமாக அமையும். மீண்டும் ஒரு தவறு, குற்றம் நடைபெறுதல் குறையும். இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைதான். இதற்கு அப்பாவிப் பெண்களும் அவர்கள் வயிற்றில் தவறிப் பிறக்கும் குழந்தைகளே பலியாடுகள் !
பிஞ்சு குழந்தைகளைக் கூட விட்டு வைக்க முடியவில்லை சிலரால்... என்ன ஒரு கொடூரச் செயல்கள். எங்கே போய்க் கொண்டிருக்கின்றது இந்தச் சமுதாயம்? ஒரு 10 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள்... பாவம்...என்ன செய்தாள் அவள்?
தண்டனைகள் கட்டாயப் படுத்த வேண்டும். தவறு, மற்றும் குற்றம் செய்பவர்கள் பெரிய மனிதர்களைப் போல் வலம் வருகின்றனர். என்னே ஒரு கொடூரம்? தண்டிக்கப் படவேண்டாம்? கட்டாயம் வேண்டும். எவராயினும் குற்றம் செய்தவனுக்கு தண்டனை கடுமையாக இருக்கவேண்டும். இதற்கான சட்டத்தை உடனே செயல் படுத்துவது முக்கியம் அவசியமும் கூட.
எப்படிப் பார்த்தாலும் நம் இந்திய கலாச்சாரப்படி குழந்தை பெற்றெடுப்பது என்பது கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு தான் பொருந்தும் . இதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.
பிஞ்சு குழந்தை உருவாகி, பெற்றெடுக்கும் பெண் தாயானவள்... அவளுக்கு இணை அவளே இப்பூவுலகில்... அந்தத் தாயின் உன்னதத்தை வெளிப்படுத்தும் கதைகள், கட்டுரைகள் இங்கு படைக்கின்றேன். சுகமான தருணங்கள், கற்பனை சந்தோஷங்கள், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை இதமான கதைகள் மூலம் உங்களை நிச்சயம் சந்திக்கின்றேன்...அனைவரின் அன்பான ஆதரவும், துணையும் நாடும்
I am a writer/ Blogger . I have written and published 7 books in tamil. I write in English also. My writings are mostly in the form of short stories. Here, at Confused Parent .com platform I am the very first blogger in REGIONAL LANGUAGE - TAMIL. I sincerely thank Ekta Chawla for had given me this great opportunity. My focus will be mainly on motherhood, child care, child development & Issues. Seek all your support and guidance .