"ஸ்ரீதி ..! என்னடி பண்ணிண்டிருக்கே? கூப்பிடறது காதிலே விழலே? " என பாட்டி குரல் நன்றாய் கேட்டது... ஆனால் இவளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாதது போல் சுவரின் மீது எதையோப் பார்த்துக்கொண்டிருந்தாள்..
"பாவனா... என்னடி ஆச்சு இந்த ஸ்ரீதிக்கு ? எதையோ பறிகொடுத்தவ போல இருக்கா? நீ என்ன இதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கே.... இங்க வா ! " அம்மா கூப்பிட்டதும் ஓடி வந்தாள் "என்னமா வேணும் உனக்கு? அடுப்பில் கேசரி கிளறிண்டு இருக்கேன் அடி பிடிக்கப்போறது..சொல்லு சீக்கிரம்..." அவசரப் படுத்தினாள் பாவனா....
ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு கல்யாணத்திற்கு வந்தாள் பாட்டி.. மாப்பிள்ளை ஊரில் இல்லாததால் மேலும் 4 நாட்கள் தங்கும்படி பாவனா கூற மறுக்க முடியாமல் சரி என்றாள் .
" ஏய்... இங்கப் பாரு உன் பெண்னை ... நான் கூப்பிட்டா கூட பதில் இல்லை... கொஞ்சம் வத்தல் போட கூப்பிடலாம்னு....எதுக்கு இப்படி இருக்கா ? "
"அம்மா...! அவா உலகமே வேற ,,, எத்தனையோ யோசனைகள்..... இப்ப 10 ம் கிளாஸ் படிக்கிறா... என்ன மேலே படிக்கறது..? வேற கம்ப்யூட்டர் கிளாஸ் சேரலாமா? டான்ஸ் கத்துக்கறதை நிறுத்தலாமா? இப்படி எத்தனையோ.... நீ கூப்பிடறது எல்லாம் காதிலே விழாது... கொஞ்சம் இரு... நான் அடுப்பை அணைச்சுட்டு வரேன்... " பொறுப்பில்லாமல் தன் மகள் பேசியதாய் நினைத்தாள் பாட்டி...
" போடி பாவனா.... நீ இதோ இந்த வயசிலேயும் நான் கூட்டா ஓடி வரே ... என்னமோ போ.... இதுகள் ஏன் இப்படி ? "
பாவனா உள்ளே சென்று கேசரியை இறக்கி விட்டு வந்தாள் ..
" நாங்க வளர்ந்த சூழ்நிலை வேற... இப்ப இதுகள் இருக்கற காலம் வேற.... நாங்க இப்படியா தனியா இருந்தோம்.... சுத்தி எப்போதும் 10 பேராவது இருப்பா... லீவு விட்டால் போதும்... பாட்டி ஆம், அத்தை ஆகம்னு போவோம்... 10 நாள் இருந்துட்டு வருவோம்.... அக்கம் பக்கம் எல்லோருடனும் விளையாடுவோம்.... எப்பவாவது சினிமா போனா கும்பலா போவோம் எத்தனை குஷியாக இருக்கும்... இப்ப? நாங்க மூணு பேரு சேர்ந்து ஒரு படம் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லைம்மா... காலம் மாறிப் போச்சு..... இப்போ எல்லாம் ரெக்கை கட்டிண்டு பறக்க வேண்டி இருக்கு.... ஏதோ நான் 10 வருஷத்திற்கு முன்னாடியே வேலையை விட்டுட்டேன்... தப்பிச்சேன்... இல்லைனா உங்கிட்ட இப்படி சாவகாசமா பேசிண்டிருக்க முடியுமா....? " பாவனா பேசிக்கொண்டே கூழை எடுத்து அச்சில் போட்டு பிழிந்தாள் ...
"நிஜமாவே எனக்கு ஒரு பயம் வந்திடுற்துமா... எனக்கு இதோ நீ இருக்கே... சுத்தி சித்தி, அத்தை, அண்ணா, மன்னி, நாத்தனார்னு சொந்தங்கள் பிரியாமல் அப்பப்ப பேசிண்டு ஒருவருக்கு ஒருவர் நம்ம அன்றாட நிகழ்வுகளை பரிமாறிண்டு இருக்கோம்.... ஆனால், எங்க அடுத்த தலைமுறை என்ன ஆகப்போறதுன்னு தெரியலே... ஒத்தை குழந்தை...! பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா சித்தி, பெரியம்மா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கை...என்கிற சொந்தங்கள் எல்லாம் என்ன ஆகும்..? உறவுகள் அவ்வளவுதானா? " ஒரு பயம் தன் மகளின் கண்களின் கண்ட பாட்டிக்கு பக் என்றது...
" சீ... என்னடி பாவனா...? இப்பதான் தைரியமா பேசின? எதுக்கு பயம்? கலக்கம்? நீ சொன்னியே உன்னை சுத்தி இத்தனைப் பேரு இருக்கானு...அவர்களை தொத்திக்கொ... அவர்கள் வாரிசும் உன் வாரிசும் ஒன்றாய் நடை போடட்டும்.... எப்படி உறவுகள் அழிஞ்சிடும்னு சொல்லு! நாமதான் குழந்தைகளுக்கு பந்தங்களை சொல்லித்தரணும் .... நீ சொல்லித்தா.... ஸ்ரீதிக்கு எல்லோரும் இருக்கா... பயத்தை விடு..." ஆதரவாய் மகளின் கையை தடவினாள் பாட்டி...
"பாட்டி, நான், நீ, அம்மா தாயக்கட்டை விளையாடலாமா? அப்புறம் எங்கயாவது போகணும்... அம்மா சொல்லு எங்க போலாம்..? " ஸ்ரீதி பாட்டி மடியில் சாய்ந்தாள்.
" பக்கத்திலே ஒரு புது மால் வந்திருக்கு பாட்டியை கூட்டிண்டு போலாமா? " பாவனா கேட்க
" ஒன்னும் வேண்டாம்... ஒரே போர்.... அத்தை ஆத்துக்கு போலாம்.... ரோஷன் ஸ்கூலேர்ந்து வந்திடுவான்.... சரியா ? "
"போலாமே.... என் செல்லம்... நானும் உன் அத்தையைப் பார்த்து ரொம்ப நாள் அச்சு... போலாம்... கொஞ்சம் கூழ் எடுத்து வெச்சுக்கோ பாவனா... அப்புறம் கேசரி... மறக்காதே.... குழந்தைக்கு என்ன பிடிக்கும் ஸ்ரீதி...? "
"வேர்க்கடலை உருண்டை.... அதான் அவனோட சாய்ஸ்... " ஸ்ரீதி சந்தோஷமாய் சொல்ல " அப்ப 200 கிராம் வேர்க்கடலை வாங்கிண்டு வா... அதற்குள்ள பாகு வைக்கிறேன்.... நானே உருண்டை செய்துடறேன் ... " பாட்டி சொல்லிவிட்டு மீதம் இருந்த கூழை உருட்டி வைத்து கிளம்பினாள்...
அடுப்பில் குக்கர் வைத்துவிட்டு எல்லோரும் தாயம் விளையாட ஆரம்பித்தனர்...
4 மணி அத்தை வீட்டில்...
" ஒரே அடம் மன்னி... இந்த ரோஷன் ரொம்ப பிடிவாதம் பிடிக்கறான்.... ஏழு வயசுக்கே இந்த ஆட்டம்.... " காபியுடன் வந்தாள் ரூபா ஸ்ரீதியின் அத்தை....
" இந்தா குழந்தை... உனக்கு கடலை உருண்டடை பிடிக்குமாமே .. இந்தா சாப்பிடு..." பாட்டி கொடுக்க பல்லெல்லாம் வெளியே தெரிய குஷியாய் வாங்கிப் போய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தான்.... ஸ்ரீதி அவனை சீண்டிக் கொண்டிருந்தாள்... இருவரும் ஏதோ பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்...
ஸ்கூலில் ஏதோ வரைந்ததை ஸ்ரீதிக்கு காண்பித்து சந்தோஷப்பட்டான் ரோஷன்.... அதைப் பார்த்த பாவ்னாவிற்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.... தெரியாமல் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள் ...
"மன்னி... கார அப்பம் பண்ணலாமா.... " நாத்தனார் கேட்க.... " நீங்க ரெண்டுப் பேரும் உட்கார்ந்துண்டு ... பேசுங்கோ.... சாமான்களை சொல்லு நான் செய்யறேன்... " பாட்டி சொல்ல " ஆமாம்... நீ வா.. அம்மா நல்லா பண்ணுவா... நானும் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு என்றாள் பாவனா...
"உறவுகள் என்றும் அழிவதில்லை .... நம் மன ப்ரம்மைதான்.... கொஞ்சம் புரிதல், வீட்டுக் கொடுத்தல் இருந்தால் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு அளவேயில்லை...”
மனதில் நினைத்துக் கொண்டே ஒரு புன்சிரிப்போடு புதுப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள் பாவனா..
"பாட்டி... நேத்திக்கு வந்தாளே அது யாரு ? "
" என்னோட மாமா பொண்ணோட நாத்தனார்.... இங்கதான் பக்கத்துக்கு தெருவிலே இருக்கா.... நான் வந்திருக்கேன்னு சொல்லிருக்கா. அதான் வந்தா.... " பாட்டி .
" இன்னிக்கு நாம எங்க போகப்போறோம்? " ஆவலோடு ஸ்ரீதி கேட்க " உன்னோட சித்திப்பாட்டி கிரோம்பேட்டைல இருக்கா... அவளைத்தான் பார்க்கப்போறோம்... அவ ஆத்திலே கோகிலா அவ பேத்தி 10 வயசாறது இருக்கா.... அப்புறம் இப்பதான் அவளுக்கு தம்பி பிறந்திருக்கு..... " சொல்லி முடிக்குமுன் " அம்மா.. சரி சாப்பிடலாம்... சீக்கிரம்... கிளம்பனும் " பாவனா அழைத்தாள் ...
"இத்தனைப் பேரு இருக்காளா? " ஆச்சரியத்துடன் கேட்ட பேத்தியை ஆசையோடு அணைத்து " ஆமாம்டி.... நிறைய பேரு இருக்கா.... " என்றாள் பாட்டி, சிரித்துக்கொண்டே ...!
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாவனா முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டிருப்பதைப் பார்த்து பாட்டி திருப்தி அடைந்தாள்.
மைதிலி ராம்ஜி
பிஞ்சு குழந்தை உருவாகி, பெற்றெடுக்கும் பெண் தாயானவள்... அவளுக்கு இணை அவளே இப்பூவுலகில்... அந்தத் தாயின் உன்னதத்தை வெளிப்படுத்தும் கதைகள், கட்டுரைகள் இங்கு படைக்கின்றேன். சுகமான தருணங்கள், கற்பனை சந்தோஷங்கள், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை இதமான கதைகள் மூலம் உங்களை நிச்சயம் சந்திக்கின்றேன்...அனைவரின் அன்பான ஆதரவும், துணையும் நாடும் I am a writer/ Blogger . I have written and published 7 books in tamil. I write in English also. My writings are mostly in the form of short stories. Here, at Confused Parent .com platform I am the very first blogger in REGIONAL LANGUAGE - TAMIL. I sincerely thank Ekta Chawla for had given me this great opportunity. My focus will be mainly on motherhood, child care, child development & Issues. Seek all your support and guidance .